திங்கள், 24 ஆகஸ்ட், 2009

கடற்கரை அனுபவம்

அன்றொரு நாள்,
மாலை நேரம்.

கடலை ரசிக்க,
நாம் இருவரும் காலாற
நடை போடுகிறோம்.

கார் மேகத்தைக் கண்டால்
தோகை விரித்தாடும் மயில் போல்
உன்னைக் கண்ட கடலும்
அலைகளை அள்ளி எறிந்து
கும்மாளம் போடுகிறது.

கடலை ரசித்தபடி
நாமிருக்க, விரைவில்
நகர்ந்து சென்று விட்டது
நான்கு மணிநேரம்.


"போதும், போகலாம்.
சலித்துவிட்டது - கடல்" என்கிறாய்
நீ.

"இல்லை, இரு.
இன்னும் உன்னை
ரசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றது
கடல்.

உன்னிரு இமை மூடி,
என் இடது தோளில்
தலை சாய்க்கிறாய்
நீ.

என் மீது கோபம்
கொண்ட கடல்,
நுரைத்த எச்சிலை
என் முகத்தில்
உமிழ்ந்துவிட்டுச் சென்றது.

கடற்கரை மணலில்
உன் பெயரை வரைகிறேன்
நான்.

ஆர்ப்பரிக்கும் அலையுடன் வந்து - அதை
கவர்ந்து செல்லப் பார்க்கிறது,
கடல்.

கடல் தோற்றதைக் கண்டு
சிரிக்கிறேன்
நான்.

அதைக் கண்ட கடல்,
கருக்கூடி நிற்கிறது
வானில்.

ஒரு வினாடி கூட
விரையம் ஆக்காமல்
மறு நொடியே வந்தது - மழை.

உனது பெயரை
கடலுக்குள் அடித்துச் சென்றதும்
கலைந்தது மேகம்; நின்றது மழை.

முழுக்க
நனைந்து விட்டோம்
நாம்.

திரும்பி பார்க்கிறேன்,
உன்மேல் விழுந்த
மழைத்துளி யாவும்
முத்தாய் மாறி
சிதறி கிடக்கிறது, தரையில்.

சேர்ந்தன சிப்பியினங்கள்,
சூழ்ந்தன நமிருவரை.

"முத்தே முத்துக்களை உருவாக்கினால்
சிப்பிகளுக்கு என்ன வேலை,
என்ன மதிப்பு?" கோபத்தில்
கத்தி யதொரு சிப்பி.

மௌனமாய் நாமிருக்க,
அலைகடலும் அமைதியாயிருக்க,
கலைந்து செல்கிறது
சிப்பிகள் கூட்டம்.

மாலை நேர சூரியனின் முகமும்
சிவந்து விட்டது - செஞ்சிவப்பு நிறத்தில்,
வாடிய உன் முகத்தைக் கண்டு.


இருந்த இடத்தை விட்டு
நகர்கிறோம் நாம்,
சூழ்கிறது இருள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக