திங்கள், 24 ஆகஸ்ட், 2009

கடற்கரை அனுபவம்

அன்றொரு நாள்,
மாலை நேரம்.

கடலை ரசிக்க,
நாம் இருவரும் காலாற
நடை போடுகிறோம்.

கார் மேகத்தைக் கண்டால்
தோகை விரித்தாடும் மயில் போல்
உன்னைக் கண்ட கடலும்
அலைகளை அள்ளி எறிந்து
கும்மாளம் போடுகிறது.

கடலை ரசித்தபடி
நாமிருக்க, விரைவில்
நகர்ந்து சென்று விட்டது
நான்கு மணிநேரம்.


"போதும், போகலாம்.
சலித்துவிட்டது - கடல்" என்கிறாய்
நீ.

"இல்லை, இரு.
இன்னும் உன்னை
ரசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றது
கடல்.

உன்னிரு இமை மூடி,
என் இடது தோளில்
தலை சாய்க்கிறாய்
நீ.

என் மீது கோபம்
கொண்ட கடல்,
நுரைத்த எச்சிலை
என் முகத்தில்
உமிழ்ந்துவிட்டுச் சென்றது.

கடற்கரை மணலில்
உன் பெயரை வரைகிறேன்
நான்.

ஆர்ப்பரிக்கும் அலையுடன் வந்து - அதை
கவர்ந்து செல்லப் பார்க்கிறது,
கடல்.

கடல் தோற்றதைக் கண்டு
சிரிக்கிறேன்
நான்.

அதைக் கண்ட கடல்,
கருக்கூடி நிற்கிறது
வானில்.

ஒரு வினாடி கூட
விரையம் ஆக்காமல்
மறு நொடியே வந்தது - மழை.

உனது பெயரை
கடலுக்குள் அடித்துச் சென்றதும்
கலைந்தது மேகம்; நின்றது மழை.

முழுக்க
நனைந்து விட்டோம்
நாம்.

திரும்பி பார்க்கிறேன்,
உன்மேல் விழுந்த
மழைத்துளி யாவும்
முத்தாய் மாறி
சிதறி கிடக்கிறது, தரையில்.

சேர்ந்தன சிப்பியினங்கள்,
சூழ்ந்தன நமிருவரை.

"முத்தே முத்துக்களை உருவாக்கினால்
சிப்பிகளுக்கு என்ன வேலை,
என்ன மதிப்பு?" கோபத்தில்
கத்தி யதொரு சிப்பி.

மௌனமாய் நாமிருக்க,
அலைகடலும் அமைதியாயிருக்க,
கலைந்து செல்கிறது
சிப்பிகள் கூட்டம்.

மாலை நேர சூரியனின் முகமும்
சிவந்து விட்டது - செஞ்சிவப்பு நிறத்தில்,
வாடிய உன் முகத்தைக் கண்டு.


இருந்த இடத்தை விட்டு
நகர்கிறோம் நாம்,
சூழ்கிறது இருள்...

அம்மா

இழப்பு
உன்னைவிட்டுச் செல்லும் எதையும்
யாசிப்பதை நிறுத்திவிட்டு
யோசிக்கத் துவங்கு - அது
உனக்குச் சொந்தமில்லை என்னும்
உண்மை புரியும்.

************



அம்மா

அடுத்த ஜென்மத்திலாவது அவள்
காலுக்கு செருப்பாய் பிறக்கவேண்டும்
மிதிபட அல்ல,
அவளைத் தாங்க...

அவள் வேறு யாருமில்லை - அம்மா.

காதல்

என்னுள் நீ, உன்னுள் நான்.
தெளிந்த நீர் நீ.
திட திரவம் நான்.
நீ குளிர்ந்தால் நானாவாய்,
நான் உருகினால் நீயாவேன்.
என்னுள் நீ அடக்கம்,
உன்னுள் நான் அடக்கம்.

************

காதலின் மாயை.

என்ன ஆச்சர்யம்!
இன்னும் உயிருடன் இருக்கிறேன்,
ஒரு கோடி மின்னல் ஒளி கொண்ட
உன் விழி பார்வைபட்டும்.

************

போதையும் பேதையும்
ஒரு ஜாதி - தன்னை
தொட்டவர்களை அடிமையாக்காமல்
விட்டதில்லை இவர்கள்.

************

சலனம்

குளிர்ந்த
உன் தேகத்தை,
தொட்டுவிடவே முன்னேருகிறது
ஒரு கால் - ஆனால்
நெருப்பு வார்த்தைகளால்
சுட்டுவிடுவாய் என்று
வர மறுக்கிறது
மறு கால்.

************

புகைச்சல்

தெரியாமல் நடந்த
நம் தேக உரசலில்
தீபற்றி கொழுந்து விட்டெரிகிறது,
நம் காதல் மட்டுமல்ல,
அதைப் பார்த்தவர்கள்
மனசும் தான்.

************


கண்ணால் பேசு...

ஒலி வடிவில் பேச கற்றுகொடுத்தவள் - அம்மா
வரி வடிவில் பேச கற்றுகொடுத்தது - ஆசிரியார்
ஒளி வடிவில் பேச கற்றுகொடுத்தவள் நீதானே!.

************

கருப்பு நிலா

உன் கண்களை சற்று நேரம்
உற்றுபார்த்து முற்றும் தெளிந்தேன்,
(இரண்டு பால்வெளிகள் - இவ்விரண்டிலும்)
வெள்ளை வானத்தில்
கருப்பு நிலா.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

பூகம்பம்

11th Aug, 09.
இன்று காலை 1:40க்கு வந்த பூகம்பத்தின் தாக்கம்.
-----------------------------------------------------------------------------------

எமனும்
எட்டு உறக்கம்
உறங்கும் நேரம்.

நடுச்சாமம் தாண்டி
இரண்டு மணி நேரம்
ஆகறதுக்குள்ள,

நம்மைத்
தத்தெடுத்து வழத்தவளுக்கு
தாங்காத இடுப்புவலி.

கர்பிணிக்கு
இடுப்பு வலியா இருந்தா
பெறப்போற பிள்ளய
புறந்தள்ள பாத்திருப்பா,

இது நம்மல
தத்தெடுத்து வழத்தவளுக்கு
வந்த வலி,

இவ
புள்ளய புறந்தள்ளப் போறதில்ல
பொறந்த புள்ளைக உயிற
புடுங்கப் போறா.

தத் தெடுத்து
வழத்தவங்கிரதினாலோ என்னவோ
இந்தத் தாயிக்கு,
வைத்தியம் பார்க்க
தரணியில எவனுமில்ல

ஊதக்காத்த ஊதி ஊதி
உஷ்ணப்படுத்தி
உரங்கிட்டு இருந்த உயிரெல்லாம்
வலியில துடிக்கிறவ
ஆடுர ஆட்டம் கண்டு
ஆடிப்போயி ஓடிவந்துட்டாக
வீட்டவிட்டு வெளிய.

விஞ்ஞான மருத்துவம் வந்திருச்சு,
விம்மித் துடிக்கிற இவ
இடுப்பு வலியோட அளவு
தோராய கணக்குப்படி
6.3 ரிக்டேர்ன்னு சொல்லிருச்சு,

வலியில துடிக்கிறவள
பார்த்த வானமும்,
வாரி இரைக்குது தண்ணீர,
கண்ணீரா...

வலியில
வாந்தி எடுக்கப் பாக்குறா
கடல் நீர - சுனாமியா..

நினைச்சுக் கூட பார்க்கல,
அஞ்சு நிமிஷத்துக்குள்ள
அடங்கிப் போச்சு வலி.

வரும்போது "வர்ரேன்னு"
சொல்லாம வந்த வலி
போகும்போது "போரேன்னு"
சொல்லமலேயே போயிருச்சு...

அமைதியாக் கிடந்தவள
ஆராய்ச்சி பண்ணி பார்த்ததுல
வந்தது - இடுப்பு
வலி இல்ல,
வெப்பத்தினால வரக்கூடிய
வெரும் வலி - "சூட்டு வலி"ன்னு
சொல்லிருச்சு மருத்துவம்.

இடுப்பு வலியெடுத்தா
செத்து பொழைக்குற தாய் மாதிரி,
இவளுக்கு வர்ர இந்த
"இடுப்பு வலி"யால நித்தமும்
செத்து செத்து பொழைக்குதுக
உயிரோட இருக்குற ஜனங்க....

சனி, 8 ஆகஸ்ட், 2009

வாடகைத் தாய் - வருகை 1

வாடகைத் தாய்.
ஒரு உண்மையை உரைக்க, சில கற்பனைகளைச் சேர்த்து பதிவிடுகிறேன். இன்னும் ஒரு சில பதிவுகளில் இவள் நிறைவு பெறுவாள்.
---------------------------------------------------------------------------


அதிகாலை ஆறுமணி,
ஆதவன் அலைகடல் தாண்டி - தனது
ஊர்வலத்தைத் துவங்கும் நேரம்.

அக்கால கிழவிபோல்,
கனுக்கால் வரை
சேலையை சேர்த்துக்கட்டி,
துரிதமாய் வேலையில் ஈடுபட்டிருந்தாள் - கமலம்.

இருபது நாட்களுக்குப் பிறகு
இன்றே அவள் முகத்தில்
இன்பம் இருக்கை போட்டு
அமர்ந்து இருக்கிறது..

பொங்கி வழிந்த நீரில்
பொசுங்கி, இறந்து போன
நெருப்பிற்கு, இன்னுயிர் கொடுக்க,
தனதுயிர்க் காற்றை
குழல் வழியே கொடுத்தாள்..

உயிர் காத்தது
உத்தமனேயானலும்; அவன் உதிரம்
பருகத்துடிக்கும் நாகம் போல்,
உயிர் பெற்றதும்
சிட்டாய்ப் பறந்து - அவள்
சிறுமுகத்தில் விழுந்தது
தீச் சிறாகாய் ஒன்று.

நெருப்பின் தீவிரம்
நெடியாய் இருக்கத்,
துடியாத் துடித்தாள்,
பக்கத்தில் இருந்த பாத்திரத்தில்
கைவிட்டுதுலாவி - தரை
தட்டும் வரை தடவி - பின்,
தண்ணீர் இல்லை என்றுண்ர்ந்தாள்.

இறுதியாய்,
வெத்து பாத்திரத்தில்
விரல் விட்டுத் தேடி
எஞ்சி இருந்த இருசொட்டு நீரை
சேர்த்து எடுத்து
சிவந்த இடத்தில் செலுத்தினாள்.

தீயின் தீவிரத்தை குறைக்க,
மஞ்சள் கிழங்கெடுத்து, அதை
மழு மழுவென்று அறைத்து,
ஆமணக்கு எண்ணையை
கொழ கொழன்னு அதடனுடன்
சேர்த்து குழப்பி, சேதாரமான இடத்தில்
தேய்க்கத் தொடங்கும் போது....

அரவத்தைக் கண்டவன்
அலறல் சத்தமாய்,
நிசப்தமாய் இருந்த வீட்டை
நிலை குலைத்தது - அந்த
குரல்....


- மீண்டும் வருவள் இவள்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

சொத்து.....

பிறக்கின்ற மலர்கூட
மடிந்த பின்
உரமாகவே நினைக்கிறது
தன்னை உருவாகி, உருவம்தந்த செடிக்கு.

ஆனால்,
மனிதன் மட்டுமே
தான் வாழத், தன்
பெற்றவளின் உரம் கேட்கிறான்
பரம்பரைச் சொத்தைப் பங்கிட....

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

முதல் முயற்சி....... பயிற்சிக்காக

நித்தம் நினைப்பதுண்டு,

இன்றேனும்
ஒரு பக்க கவிதை
உதிர்க்க வேண்டும் என்று ...

தட்டுத் தடுமாறி
தலைப்பை தேர்வு செய்வேன்.

பின்,
தலைப்பிற்கு தக்கவாறு
நான்கைந்து வார்த்தைகளை வார்த்து
வாக்கியத்தை வரவழைப்பேன்.

எதுகை - மோனை,
உவமை - உருவகம்,
இலக்கண - இலக்கியம்,
இவைகளுக்கு முரணாய்

வந்த வார்த்தைகளுக்கு
வரிவடிவம் கொடுக்க,

எழுதத்
தொடங்கி விடுவேன்,
தொடங்கிய வேகத்தில்
துவண்டும் விடுவேன்...

பாதி எழுதிய பின்,
மீதியை விழுங்கிவிடுகிறேன்,

கவிதையின் நயம் கலங்கி விடுமென்று.
.
.
.
.
.
.
.

இக்கவிதை இங்கே முடிய
மற்றொன்றை எழுத மனம் விழைகிறது..... :)