புதன், 23 டிசம்பர், 2009

மழையும் மண்ணும் மனிதனும்



விந்தாய் விழுந்து நண்டுபோல் ஊர்ந்து
கருவோடு கலந்து உருவொன்ரு கொண்டு
காற்றையும் கடன்பெற்று வாங்கி ஊனுடன்
உயிரும் பெற்றது வளர்ந்திடல் ஆனதே ----(1)

அப்பனின் வயிற்றில் ஓரிரு மாதமும்
அம்மையின் வயிற்றில் ஈரைந்து மாதமும்
முடங்கி யிருந்து முடிவில் முந்திக்கொண்டு
வெளிவந்து முழு முண்டமாய் விழுந்ததுவே ----(2)

மலர்ந்த உடன் மணம் வீசும் மலராய்
பிள்ளை மண்ணில் விழுந்தவுடனே வீறிட்டழ
கல் விழுந்தவுடன் கலங்கிப்போகும் குளமாய் - குழந்தை
பெற்றவள் உடலிங்கு நிலை குலைந்திட்டதே ----(3)

அலறல் ஒளி கேட்டே ஆடவர் அகமகிழ
பிள்ளைஒளி கேட்டே பெண்டீர் பெயர்தேட
சுற்றியிருந்த சுற்றம் இனிப்பைச் சுவைத்திருக்க - பூமி
குளிர்ந்திட பொத்தென்றே மழைவந்து விழுந்ததுவே ----(4)

உயிறற்ற சடலமா யுடைந்து கிடந்தவள்
தத்தி யெழும்புகிறாள் தண்டுடைந்த கொடிபோல
இழந்த சக்தியையெல்லாம் மீண்டும் இறுகப்பிடித்திழுத்தே
பெற்றவள் மயங்குகிறாள் பிள்ளையின ழகுகண்டே ----(5)

பிள்ளையை யேந்துகிறார் பெண்டீர் பெற்றவரிடத்தினிலே
முல்லைப் பூவைபோல பிள்ளையைக் கையிலேந்தி
தில்லை யரசனை யெண்ணி பெற்றவர்
கொள்ளை யழகுகொண்ட குழந்தைமுக நோக்கினாரே ----(6)

பேய்மழை பெய்துபெரு வெள்ளம் உருண்டுவர
மண்ணையும் மடுவையும் மழைநீர் மறைக்க
இடியின் கோரயிசைகேட்டு கூடியிருந்த வரெல்லம்
விழிபிதுங்கி கலங்கலானார் வீசுகின்ற காற்றையுங் கண்டே---(7)

ஆடும் அண்டி வாழும் நாயும்
ஓடும் எலியும் கொக்கரிக்கும் கோழியும்
பாடும் பச்சை கிளியும் பசியில்
வாடும் பூனையும் ஓடி ஒளிந்ததுவே ----(8)

வெளிச்சம் விலகிவிட்டது வெண்ணிலவோவர மறந்துவிட்டது
தெளிவற்ற மேகங்கண்டு பலர்தேம்பி நிற்கின்றார்
உருண்டுவந்த வெள்ளமது கதவை உந்தித்தள்ள
திரண்டுநின்ற மரமெல்லாம் திடீரென்று விழுந்ததுவே ----(9)

தொட்டிலி லிட்டார் பிள்ளையை கயிற்றுக்
கட்டிலி லிட்டார் கண்மலரா மங்கையை
அகல் விளக்கேற்றி பகல்போலாக்கி விட்டார்
வருகிற வினையறியாது வழக்கம்போலே பேசலானாரே --(10)

அடங்கிவிடும் மழையென்று அனைவரும் நினைத்திருக்க
ஒற்றைக் கண்கொண்டே காற்றுஓங்கி வீசிற்றேயது
வீட்டைப் பெயர்க்கப்பார்த்து விட்டத்தைப் பிரித்தேடுத்து
தொங்கிக் கொண்டிருந்த தொட்டிலையும் தூக்கிச்சென்றதுவே ---(11)

போர்க்களத்தில் எதிரியின் மேல்பாயும் அம்பாய்
சுற்றியிருந்த சுவரிடிந்து சுற்றத்தார் மேலேவிழ
வெள்ளம் புகுந்து வீட்டையும் நிரப்பிவிட
மின்னல் வந்திறங்கி மிரச்சியும் பண்ணிட்டதே ----(12)

ஓங்கி உயர்ந்திருந்த வீடுஉருக் குலைந்திருக்க - தண்ணீர்
தேங்கி நிற்கிறது தெரியும் திசையெங்கும்
கலகலவென இருந்த வீட்டில்கடுகளவு ஓசையில்லை - காற்று
கவர்ந்துபோன பிள்ளையைக் கண்டுபிடிக்கவும் ஆளில்லை ---(13)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக